Sunday, July 21, 2013

பிரச்னைகளை பிரியுங்கள்!


சாஃப்ட்வேர் கம்பெனி அதிகாரி, தன்னுடைய பணியாளர்களிடம் அளித்த பிராஜெக்ட் முடிவுக்கு வராமலே இருந்தது. அதுபற்றி கேட்டதற்கு, ‘அதில் பெரிய பிரச்சனையுள்ளது. தீர்ப்பது மிகவும் கடினம்...’ என்று பதிலளித்தனர். பணியாளர்கள் பிராஜெக்ட்டை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்த அதிகாரி, அவசரக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்து, ஒரு யானைக் கதையைக் கூறினார். "அரசர் ஒருவருக்கு திடீரென்று, 'தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும்..?' என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்த காலத்தில் எடை மேடைகளோ, யானைகளை நிறுத்தும் அளவுக்குப் பெரிய தராசோ கிடையாது. அதிகபட்சமே ஐந்து கிலோ அளவுக்குத்தான் கற்கள் இருந்தன. இதனால், யானையின் எடையை எப்படிக் கண்டுபிடிப்பது என்று அமைச்சரிடம் கேட்க அவருக்கும், யாருக்கும் அதற்கான வழியே தெரியவில்லை. அந்த சமயத்தில் அமைச்சரின் 10 வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். மன்னர் ஒரு வாய்ப்புக் கொடுத்தார். சிறுவன் யானையை அரண்மனை குளத்துக்கு அழைத்துச் சென்று பெரிய படகில் ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. குளத்தின் நீர்மட்டமும் உயர்ந்தது. அரசர் மகன், குளத்தின் நீர்மட்ட அளவையும், படகில் தண்ணீர் நனைந்த மட்டத்தையும் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகில் இருந்து இறக்கிவிட்டு ஐந்து கிலோ வரையான எடை கொண்ட கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். படகில் இடப்பட்ட குறியீடு மூழ்கும்வரையான அளவுக்கு கற்கள் ஏற்றப்பட்டன. கற்களை மன்னனிடம் காட்டி, ‘இதனை தராசில் வைத்து எடைபோடுங்கள். இவற்றின் கூட்டுத் தொகைதான் யானையின் எடை’ என்ற சிறுவனைப் பார்த்து அனைவரும் வியந்தனர். அங்கிருந்தவர்கள் எல்லோரும் யானையின் பிரமாண்டத்தைப் பார்த்து மலைத்தார்கள். ஆனால் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத் தொகையே யானையின் எடை என்பதைப் பிரித்துப் பார்த்ததால், விடை கண்டான். அதேபோல, எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அதனைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒட்டுமொத்த திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்'' என்று முடித்தார் அதிகாரி. தன்னுடைய பணியாளர்களுக்கு அந்த பிராஜெக்டின் பிரச்சனைகளை சிறுசிறு பகுதியாகப் பிரித்துக் கொடுத்து, அதனை வெற்றியாக்கிக் கொண்டார்.

Tuesday, April 24, 2012

பகுதி நேரப் பணிகள்

டி.வி பார்த்து பெண்கள் டைம்பாஸ் பண்ணுகிற காலத்தில், நாலு பேருக்கு முதலாளியாக... பாஸ் ஆகவே மாறவும் வழிகள் உண்டு. தொழிலுக்கான ஐடியா ஒருபுறம் இருக்க, சுயமாகத் தொழில் தொடங்குவது பற்றிய பேச்சு வந்தாலே, பல பெண்கள் சொல்வது இதுதான்: “எனக்கு நேரமே இல்லை; என்ன செய்ய?” அம்பானிக்கும் உங்களுக்கும் ஒருநாளில் 24 மணிநேரம் தான். ஆனால், அவர் கோடீஸ்வரராக இருக்கிறார். நாம் எங்கே இருக்கிறோம்..? என்று யோசித்தாலே, இதற்கான தீர்வு கிடைத்துவிடும். என்ன பதில்..? தெளிவான திட்டமிடுதல். இதுதான் தொழில்-முனை-வருக்கான முதல் முயற்சி. திட்ட-மிடுதலில் எவ்வளவு தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத் தொழிலிலும் பிரகாசிக்க முடியும். இரண்டு நிமிடங்களில் கோலம் போடும் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள். தினமும் கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்குவதை விட, வாரம் ஒருமுறை சந்தை சென்று வரலாம். ஃப்ரிஜ்ஜில் வைக்கும் காய்கறிகளின் அளவைக் குறைத்து வாங்கலாம். அன்றாட சமையலை, முன்கூட்டியே திட்டமிட்டு, அதற்கான கடைசி நேர நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். பால் வாங்குவது, பேப்பர் வாங்குவது, பலசரக்கு வாங்குவது போன்றவற்றுக்கு தினமும் நீங்கள் கடைக்குச் செல்லாமல், ஒருமுறை சென்று அவற்றைத் தெரிவு செய்துவிட்டு, மறுமுறையில் இருந்து, கடைக்காரரை வீட்டிற்கே டெலிவரி செய்யச் சொல்லுங்கள். சமையல் அறையில் வெளிநாட்டினரைவிட இந்தியர்கள்தான் நிறைய நேரம் செலவழிக்கிறார்கள். இங்கிலாந்துப் பெண்கள் அடுப்படியில் நாள் ஒன்றுக்கு மொத்தமே ஒரு மணி நேரம்தான் செலவழிக்கிறார்கள். நாமும் நமது ‘சமையலறை நேரத்தை’ குறைத்துக் கொள்ளலாமே. அடுத்தடுத்து இரண்டு நாட்களுக்கான சமையலை முன் கூட்டியே மனதில் ஓடவிட்டு சமையல் நேரத்தைக் கச்சிதமாகக் குறைத்துக் கொள்ளப் பழக வேண்டும். ‘க்விக் அண்ட் ஹெல்தி’ சமையல்தான் இன்றைக்குத் தேவை. இடியாப்பம், தோசை மாவு, சப்பாத்தி போன்றவை அப்படியே பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படுகின்றன. ஓர் அவசரத்திற்கு இவை ஓ.கே. மற்றபடி சமைக்கும்போது இரண்டு வேளைகளுக்குச் சேர்ந்தாற்போல் சமைக்கலாமே! ஒரு வாரத்திற்குத் தேவையான மாவை ஒரே நாளில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். வாரம் முழுவதும் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் பட்டியலிட்டு, அதில் இரண்டு முறை அல்லது மூன்று முறை செய்கிற வேலைகளை எல்லாம், ஒரு முறையாகக் குறைக்க முடியுமா என்று பாருங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு நேரம் குறைகிறதோ, அந்தளவுக்கு நீங்கள் தொழிலில் கவனம் செலுத்தலாம். நாள் முழுவதும் பார்க்கவேண்டிய வேலைகள் தவிர, வாரந்தோறும் பார்க்க வேண்டிய வேலைகள், மாதந்தோறும் பார்க்க வேண்டிய வேலைகள் என அனைத்தையும் பட்டியல் போடுங்கள். முடிந்தால் நீங்களோ அல்லது குடும்பத்தில் அனைவருமாகவோ பணியாட்களை நியமித்தோ வேலையைப் பகிர்ந்து கொடுத்து விடுங்கள். இப்படிச் செய்தால் நிச்சயம் உங்களுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் எட்டு மணி நேரமாவது மிச்சம் கிடைக்கும். கிடைக்கும் நேரத்தில் வீட்டில் இருந்தபடியே உற்பத்தி செய்யக்கூடிய தொழிலில் இறங்கலாம். மாலை 5 மணிக்குத் துவங்கி, 9 மணிக்குள் முடிக்ககூடிய வர்த்தக நிறுவனங்களைத் தொடங்கலாம். சூப் மற்றும் திண்பண்டக் கடைகள் மாலைநேர வர்த்தகத்துக்கு உகந்தவையாக உள்ளன. சிக்கன் பகோடா போடும் கடைகளுக்கு இன்று நல்ல மார்க்கெட் உள்ளது. அவற்றைத் துவங்கினால், சூப்பரான வருமானம் கிடைக்கும். நம்பிக்கையான நபர் கிடைத்தால், ஒரு தொழில் தொடங்கி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நீங்கள் மாலை வேலைகளில் சென்று நிர்வாகத்தை மட்டும் கவனிக்க முடியும். உதாரணத்துக்கு எஸ்.டி.டி பூத் வைத்துள்ளீர்கள். மீட்டரில் காட்டும் கணக்குக்கு காசு வசூலிப்பதுதான் வேலை என்று வைத்துக் கொள்வோம். மீட்டர் ரீடிங்கிற்கும், கல்லாவில் இருக்கும் கணக்குக்கும் சரியாக இருக்கிறதா..? என்பதை சோதிக்க நாள் ஒன்றுக்கு அரைமணி நேரம் இருந்தாலே போதுமே! இளைஞர்களின் தங்கும் விடுதிகள், லேடீஸ் ஹாஸ்டல்கள் என்று சென்னை போன்ற நகரங்களில் கொத்து கொத்தாக சில பகுதிகள் உள்ளன. இவர்களை மையமாக வைத்தும்கூட பகுதி நேரத் தொழிலில் ஈடுபடலாம். மெஸ் துவங்குவது, சலவை கடை நடத்துவது போன்றவற்றைச் செய்ய முடியும். நமக்கு என்ன நேரம் கிடைக்கும்... அதை எப்படிப் பயன்படுத்தினால், என்ன தொழில் செய்ய முடியும் என்று யோசித்தால், பார்ட் டைமாக பண்ணினாலும், நீங்களும் முதலாளிதான்.

Friday, August 27, 2010

கார் வாங்க வந்த கைப்புள்ள‍..!

வாடிக்கையாளர் தான் ராஜா என்பதற்கு உதாரணம் இந்த சீனக் கார் நிறுவனம்.
ஜாவோ என்ற பிளாஸ்டிக் பிரிண்டிங் நிறுவன வியாபாரிக்கு கார் வாங்க வேண்டும் என்பது கனவு. சிறுவாடு சேர்ப்ப‍து போல, காசை சேர்க்க‍ ஆரம்பித்தார். ஆயிரம் யுவான் சேர்ந்தவுடன் ஒரு ரப்ப‍ர் பேண்ட் போட்டு, அட்டைப் பெட்டியில் சேர்த்துள்ளார். இப்ப‍டி பல வருடங்களாக சேமித்து, ஒரு லட்சம் யுவான் சேர்ந்ததும், (ரூ.7 லட்சம்) அதை எடுத்துக் கொண்டு கார் டீலரிடம் போனார் ஜாவோ.
"கார் வேண்டும்... கொஞ்சம் சில்ல‍றை நோட்டா இருக்கு... பரவாயில்லையா..?" என்று கேட்டுள்ளார் ஜாவோ.
"என்ன பெரிய சில்ல‍றை..? சின்ன‍ப்புள்ள‍த் தனமா இருக்கே..!" என்று ஒப்புக் கொண்ட கார் நிறுவனம், ஜாவோ தூக்க‍ முடியாமல் தூக்கி வந்த மூன்று மூட்டைகளைப் பார்த்து திகைத்துப் போனது.
கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள்! நைந்து போன‌வை, க‌றை ப‌டிந்த‌வை, ஒட்டிக் கொண‌டு வ‌ர‌ மறுத்‌த‌வை, ர‌ப்ப‌ர் பேண்ட் உருகி ஒட்டிக் கொண‌டு இருந்த‌வை என்று எண்ணுவ‌த‌ற்கு ஒத்துழைக்க‌ ம‌றுத்த‌ன‌ நோட்டுக‌க‌ள்.
மூன்று ஊழியர்களைக் கொண்டு நோட்டுகள் எண்ணும் பணி துவங்கியது. லஞ்ச் நேரம் வந்தபோதும் பாதி பணத்தைக் கூட எண்ணியபாடில்லை. மேலும் இரு ஊழிய‌ர்க‌ளைக் கொண்‌டு நோட்டுக‌க‌ளை எண்‌ண‌ ஆர‌ம்பித‌த‌ன‌ர். அலுவ‌ல‌க‌த்தில் வேறு எந்த‌ வேலையும் ஓடவில்‌லை.
கிழிந்து விடாமல் பிரிப்ப‍தே பிரம்மப் பிரயத்த‍னமாக இருக்க‍... மாங்கு மாங்கென்று அத்த‌னை நோட்டுக்க‌ளையும் எண்ணி முடித்த‌போது மாலையாகி விட்டிருந்த‌து. நாள் முழுக்க‌ ஒரே ஒரு கார் விற்ப‌னைதான் அந்த‌ சீன‌ நிறுவ‌ன‌த்தில் ந‌டைபெற்ற‌து.
தொகை ச‌ரியாக‌ இருப்ப‌தை உறுதி செய்த‌பின் ஜாவோவிடம் கார் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌ல‌ வ‌ருட‌ம் காத்திருந்து கார் வாங்கிய‌ ஜாவோவிற்கு ஒருநாள் காத்திருப்பு பெரிய‌ விஷ‌ய‌மாக‌ ப‌ட்டிருக்காது.
நம்ம‍ ஊர் வேட்பாளர்கள் சில்ல‍றையோடு வந்து, அதிகாரிகளை லந்து பண்ணுவது ஞாபகத்துக்கு வருகிறதா..?

மொபைல் ஆஃபீஸ் பராக்!

ம்ப்யூட்ட‍ர் விற்பனையைவிட, லேப்டாப் விற்பனை விகிதம் எகிறிக் கொண்டிருக்கிறது.
ஏப்ரல் முதல் ஜூன் வரை விற்கப்ப‍ட்ட‍ கம்ப்யூட்ட‍ர்களின் புள்ளிவிவரப்படி, 15.60 லட்சம் டெஸ்க் டாப் கம்ப்யூட்ட‍ர்கள் விற்பனையாகி உள்ள‍ன• இது சென்ற ஆண்டின் இதே மூன்று மாத விற்பனையான பனிரெண்டரை லட்சம் கம்ப்யூட்ட‍ர்களோடு ஒப்பிடும்போது, 24 % அதிகம்.
அதேசமயம், லேப்டாப் கம்ப்யூட்ட‍ர்கள் 5.61 லட்சம் இந்த ஆண்டில் விற்பனையாகி உள்ள‍ன• இது 61 % அதிகம்.
கம்ப்யூட்ட‍ர் விற்பனையில் டெல் (15 %) ஹெச்.பி (14.3%)ஆகியவை முன்ன‍ணியில் உள்ள‍ன•
வருங்காலம் கம்ப்யூட்ட‍ர் காலம் மட்டுமல்ல, மொபைல் ஆஃபீஸ்களின் காலமாக மாறி வருவதற்கு இது ஒரு சாட்சி!

Thursday, August 19, 2010

சொத்து, சுகம் தராது பாஸூ!

ஒரு அளவுக்கு மேல் சேர்ந்தால், சொத்தும் சுமையாகும் என்று புலம்பி உள்ளார் ஆஸ்திரிய நாட்டின் கார்ல் என்ற நபர்.
இயற்கை எழில்சூழ் மலைப்ப‍குதியில் உள்ள‍ சொகுசு பங்களாவில் தங்கி இருந்த அவருக்கு, தான் வசிக்கும் செயற்கை அழகு கொண்ட சொத்து பிடிக்காமல் போனது. ஏழைகளுக்குப் பயன்படும் வகையில் வீட்டை எழுதி வைக்க‍ நினைத்த‍ அவர், புதுமை முயற்சியாக லாட்ட‍ரி ஒன்றை ஆரம்பித்தார். ஒரு டிக்க‍ட் 6 ஆயிரம் ரூபாய். (999 யூரோ).
22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கார்லின் அறிவிப்பைப் பார்த்து ஆன்லைனில் அதிர்ஷ்ட சீட்டை வாங்கினர். உள்ளூர் மாடல் அழகியை வைத்து குலுக்க‍ல் முறையில் 49 வயது அதிர்ஷ்டசாலிப் பெண்மணியைத் தேர்ந்தெடுத்து, வீட்டை அவர் பெயருக்கு எழுதி வைத்துவிட்டு, நம்ம‍ ஊர் ரஜினி ஸ்டைலில் மலையை நோக்கிப் பயணித்து விட்டார் கார்ல்.
கார்லுக்கு வயது 47. 9 கோடி ரூபாய் மதிப்புள்ள‍ வீட்டை 13 கோடிக்கு ஏலம் விட்டு, அதை ஏழை மக்க‍ளுக்கு கடன் அளிக்கும் அமெரிக்க‍ அறக்க‍ட்ட‍ளையிடம் அளித்துள்ளார்.
'சொத்து, சுகம் அளிக்காது... இயற்கைதான் இறுதிவரை...' என்ற கார்ல் வித்தியாசமான மனிதர்தான்.

அறக்க‍ட்ட‍ளைக்கு வீட்டை எழுத நினைப்போர் வரவேற்கப்ப‍டுகிறார்கள். ஹி...ஹி!

Wednesday, August 18, 2010

கணக்குத் தொடங்கியாச்சு!

வர்த்த‍கம் தொடர்பான ஆச்ச‍ர்யமான, பயனுள்ள‍ செய்திகளைப் பகிர்ந்து கொள்ள‍ விரும்புகிறேன்.
ப‌லருக்கும் பல ஆலோசனைகளையும் சொல்லி வரும் நான், இதன் மூலம் இணைய நண்பர்களுக்கும் பயன்படுவதில் மகிழ்ச்சி.
இனறு தொடங்குகிறது, இந்தப் பயணம்...